இலங்கையில் கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுன முயற்சிப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அந்த கட்சியின் ஸ்தாபகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தலைமையில், கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை இல்லாது செய்வது தொடர்பில் பேசப்படுகிறது. இந்த தேர்தல் தொடர்பில் நாம் தற்போது அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.
தேர்தலுக்கு ஆயத்தம்
தேர்தலை பொதுஜன பெரமுன ஒருநாளும் ஒத்திவைத்ததில்லை. அந்த தேவையும் எமக்கு இல்லை. நாம் தேர்தலுக்கு ஆயத்தமாக இருக்கிறோம். அத்துடன், இலங்கையில் அதிபர்த் தேர்தல் எனும் ஒன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்தையடுத்து, எமது கட்சியின் வேட்பாளர் தொடர்பான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படும்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒரு கட்சியாக நாம் எவ்வாறு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளோம் என்பது குறித்து எதிர்காலத்தில் மக்களுக்கு தெரியப்படுத்துவோம். இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு
ஜனநாயகமான ரீதியில் சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கைகள் மூலம் மக்கள் பயனடையும் நடவடிக்கைகள் குறித்தும் பசில் ராஜபக்ச தலைமையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
மக்கள் நலனுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு நாம் ஆதரவளிப்போம். எனினும், 2048 ஆம்ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து தற்போது பேசுவது அர்த்தமற்றது.
தற்போது இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகளை தீர்வின்றி நிலுவையில் வைத்துக் கொண்டு தேர்தல் குறித்தும் பேசமுடியாது. என்றார்.