இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு கடன் மேம்படுத்தல் திட்டத்தை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரால் இந்த மனு நேற்று(26.09.2023) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமை மனு
இந்த மனுவின் பிரதிவாதிகளாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உள்ளிட்ட பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
BBX என்ற இந்த கடன் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ், அரசுப் பத்திரங்களில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்யப்படும் போது வழங்கப்படும் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், ஊழியர் சேமலாப நிதி நிறுவனமானது(EPF) குறைந்தது 2.5 மில்லியன் உழைக்கும் மக்களின் கணக்குகளைக் கொண்டுள்ளது. அவர்களின் நிதி பெரும்பாலும் திறைசேரி உண்டியல் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
இந்தநிலையில் அதன் நிதியின் வட்டி விகிதத்தை 9 வீதமாகக் குறைப்பது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.