2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்னும் செல்லுபடியாகும் என்றும், அவை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தின் மூலம் மட்டுமே இரத்து செய்யப்பட முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழு, உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.
வேட்புமனுக்களை இரத்து செய்ய ஆலோசனைக் குழுவின் தீர்மானம் எதையும் செய்யாது என்றும் வேட்பு மனுக்களை இரத்து செய்ய வேண்டுமானால், அதை நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் மட்டுமே செய்ய முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் திறைசேரியால் தேவையான நிதி விடுவிக்கப்படாத நிலையில் ஏப்ரல் 25 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
அந்த நேரத்திலும் நிதி வெளியிடப்படாததால், மீண்டும் தேர்தலை காலவரையின்றி தேர்தல்கள் ஆணைக்குழு ஒத்திவைத்ததால், வேட்புமனு தாக்கல் செய்த அரச அதிகாரிகள் பலர் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிட்டது.
எவ்வாறாயினும் வேட்புமனுக்களை இரத்து செய்வதால் சுமார் 1000 கோடி இழப்பு ஏற்படும் என்றும், மக்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல் என்றும் எதிர்க்கட்சி மற்றும் சிவில் அமைப்புகளிடமிருந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் வேட்புமனுக்களை இரத்து செய்ய ஆலோசனைக் குழு முடிவு செய்திருந்தது.