முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.
இதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, தான் வகித்து வந்த நீதிபதி பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருந்தூர் மலை தொடர்பில் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையில் முரண்பாடுகள் காணப்பட்டன. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் தீர்ப்புக்கு அமைய அங்கு வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர்கள் கள ஆய்வினை மேற்கொண்டிருந்த போது, குருந்தூர் மலையில் பௌத்த மதகுருமார்கள் வழிபாடுகளை மேற்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியது.
நீதிபதி விசாரணை
இந்த சம்பவத்தை நேரில் பார்வையிட்ட நீதிபதி உடனடியாக வழிபாடுகளை நிறுத்தக்கோரி பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
நீதிபதியின் உத்தரவு தொடர்பில் பொலிஸார் பௌத்த மதகுருமாருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து குருந்தூர்மலை விகாரையில் மேற்கொள்ளப்பட்ட வழிபாடுகளை பௌத்த மதகுருமார்கள் நிறுத்தினர்.
இந்த சம்பவத்தை பார்வையிட்ட தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் உட்பட பலர், நீதிபதி அங்கு விசாரணைகளை மேற்கொண்ட போதே நீதிமன்றத்தின் உத்தரவுகள் எதனையும் மதிக்காமல் பிக்குமார்கள் பூக்களுடன் விகாரையில் ஏறினார்கள்.வணக்க நிகழ்வுகளில் ஈடுபட்டார்கள்.
வடக்கு கிழக்கில் நீதிமன்றங்கள் எதைச் சொன்னாலும் கணக்கில் எடுக்கப்போவதில்லை, தாங்கள் நினைப்பதைத்தான் செய்வோம் என்கின்ற செய்தியினைத்தான் அவர்களின் நடவடிக்கை ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்கள் எனக் கண்டனம் வெளியிட்டனர்.
நீதிமன்ற அனுமதி
பின்னர் இந்நிகழ்வு குறித்து நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், நீதிபதியை அச்சுறுத்தும் விதமாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கருத்துக்களை வெளியிட்டார்.
அவருடைய கருத்துக்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்ததுடன் குருந்தூர் மலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு மீறப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பின்னணியிலேயே, அதனைப் பார்வையிடுவதற்காக நீதிபதி அங்கு பிரசன்னமானார்.
இந்த விவகாரத்தில் தமிழ் நீதிபதியொருவரின் தலையீட்டை வாய்ப்பாகப் பயன்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் இனவெறியைத் தூண்டிவிடுவதற்கே சரத் வீரசேகர முயற்சிக்கின்றார் எனவும் கூறினர்.
நாடாளுமன்றத்தில் நீதி துறையையும் நீதிபதியையும் அவமதித்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து சரத் வீரசேகரவிற்க்கு எதிராக சட்டதரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் போது சகோதர மொழி சட்டதரணிகளுக்கும் சட்டதரணி சுகாஷால் அழைப்புவிடுக்கபட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதன் பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலையில் தமிழர்களால் பொங்கல் நிகழ்வு நடத்தப்பட்டது அதுபோதும் நீதி மன்ற உத்தரவை மீறி சிங்கள தரப்பினரும் பௌத்த பிக்குகளும் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குருந்தூர் மலை விவகாரத்தில் அச்சுறுத்தலுக்குள்ளான முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவண ராஜாவின் திடீர் பதவி விலகல் தமிழ் மக்கள் உட்பட தென்னிலங்கை அரசியலிலும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.