ஜப்பானில் 2021 ஆம் ஆண்டு உயிரிழந்த இலங்கை யுவதியின் மரணம் தொடர்பில், குடிவரவு மையத்தின் அதிகாரிகளுக்கு எதிராக இரண்டாவது முறையாகவும் குற்றம் சுமத்தாதிருக்க முடிவெடுத்துள்ளதாக ஜப்பானில் உள்ள சுயாதீன நீதித்துறை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் யுவதியின் குடும்பத்தினர், குறித்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும் என்று தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.
ரத்நாயக்க லியனகே விஷமா சந்தமாலி, 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 33 வயதில் மரணமடைந்தார்.
யுவதியின் மரணத்திற்கு காரணம்
இவர் ஜப்பானில் உள்ள நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியக தடுப்பில், சுமார் ஒரு மாத காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார்.
இந்த நிலையில் நாகோயாவில் உள்ள வழக்கு விசாரணைக்கான மக்கள் குழு, இலங்கை யுவதியின் மரணத்திற்கு காரணமான தொழில்முறை அலட்சியம் தொடர்பில் அந்த நேரத்தில் அதிகாரிகள் மீது குற்றம் சாட்ட முடியுமா என்பதை சட்டத்தரணிகள், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது.
இருந்தபோதும் மரணமான யுவதியின் குடும்பத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, ஸோய்ச்சி இபுசுகி, ”அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்த குற்றத்தை மூடிமறைத்து அலட்சியம் செய்கின்றனர்” என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே அவர்கள் குற்றத்தை பொறுப்பேற்க, தொடர்ந்து போராடப்போவதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் நகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகம், “சட்டத்தரணிகளின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கும் நிலையில் இல்லை” என்று கூறியுள்ளது.
விஷ்மா ஒரு மாணவியாக 2017 இல் ஜப்பானுக்கு சென்றார். எனினும் வீசா காலம் முடிந்தும் அங்கு தங்கியிருந்தமைக்காக குடிவரவு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இதன்போதே அவரின் மரணம் சம்பவித்திருந்தது.