நீதித்துறை என்பது சுயாதீனமாக இயங்க வேண்டும் என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான அமைப்பின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (30.09.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
நீதித்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அது தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தியும் உண்டு. ஆனால், என்னைப் பொருத்தவரை நீதித்துறை சுயாதீனமாக இயங்க வேண்டும்.
அடுத்த வருடம் நிச்சயமாக நான்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அவற்றை நடத்த வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் நான்கு தேர்தல்களும் கட்டாயம் நடத்தப்பட வேண்டியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்,மாகாண சபைத் தேர்தல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பன நிச்சயமாக நடத்தப்பட வேண்டும்.
அடுத்த முறை தேர்தல்கள் நடைபெறும் போது மக்களை நாங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அதாவது கௌரவமானவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால் சிறந்த நாடாளுமன்றத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டுமென்றால் நிச்சயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியான கருத்துடன் தான் சமூக நீதிக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது. நான் அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படவில்லை.
நல்லவர்களைத் தெரிவு செய்யுங்கள்
ஆனால், அரசாங்கம் செய்யும் சில நல்ல செயற்பாடுகளை ஆதரிக்கின்றேன். அரசாங்கம் விடும் தவறுகளை திருத்துமாறு அழுத்தங்களை கொடுத்து வருகின்றேன். நான் இதை ஒட்டுமொத்த மக்களுக்கும்தான் கூறுகின்றேன்.
இனவாதிகளையும் சமூகங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் பிளவுகளை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் வெறுப்பு உணர்வுகளை தூண்டுபவர்களை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யாதீர்கள்.
அவர்களை நிராகரியுங்கள். இலங்கை நாட்டு மக்கள் அனைவருக்கும் கூறுகின்றேன். நல்லவர்களைத் தெரிவு செய்யுங்கள். நல்லவர்களை நாடாளுமன்றம் அனுப்புங்கள்.
கௌரவ உறுப்பினர்கள் என்று அழைக்கக் கூடியவர்களை கௌரவமான நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கள். அவ்வாறானவர்களையே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.