யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவரிடமிருந்து சொக்லேட்டை வாங்கிய மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையொன்றில் வைத்து மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கிய சக மாணவன் ஒருவன், குறித்த மாணவியின் அண்ணனால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
13 வயதான குறித்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் தனது வகுப்பு மாணவர்களுக்கு சொக்லெட் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் மேற்படி தாக்குதலுக்கு உள்ளான 14 வயதுடைய மாணவனுக்கும் சொக்லெட் வழங்கியுள்ளார்.
தவறான புரிதல்
இதையடுத்தே எதற்காக சொக்லெட்டை வாங்கினாய்? என்று வினவி மாணவியின் 17வயதுடைய அண்ணன் அந்த மாணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
மாணவியின் அண்ணனின் தவறான புரிதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுத்திருந்ததாகவும் தொலைபேசி ஊடாக பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாட்டைப் பதிவுசெய்ய முற்பட்டபோதே முறைப்பாட்டைப் பதிவு செய்தனர் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.