நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகளும், இளைஞர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும், சமூக அக்கறையாளருமான ராகவா லாரன்ஸ், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை சென்னையில் அமைதியான வழியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கவுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை 9 மணிக்கு இந்த போராட்டம் தொடங்கவுள்ளது.
இதற்கான அனுமதிக்கு ராகவா லாரன்ஸ் ஒருவார காலம் காத்திருந்தாராம். ஜல்லிக்கட்டை பிரச்சினையைவிட ஹைட்ரோ கார்பன் பிரச்சினை மிகப்பெரியது. நாம் எல்லோரும் சேர்ந்து விவசாயிகளை காப்பாற்றுவோம் என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்திலும் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு, இளைஞர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.