கொழும்பில் உள்ள ஏழு முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று (05.10.2023) கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம் இது தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பில் நாடாளுமன்றம், துறைமுகநகரம், கங்காராமய உள்ளிட்ட ஏழு இடங்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலை நடத்தும் திட்டம் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பசன் அமரசிங்கவிடம் தகவல் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் திட்டம்
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தீவிரவாத செயல்களுக்காக தற்போது சிறையில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளால் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதிகளின் திட்டம் தொடர்பான உண்மைகளை அறிந்த பல்லேகல சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர், அது தொடர்பான குறிப்புகள் அடங்கிய கடிதத்தை தன்னேகும்புர பொலிஸ் நிலையத்திற்கு எறிந்த போது இந்த திட்டம் தெரியவந்துள்ளது.
சிறையிலுள்ள இந்த பயங்கரவாதிகள் கொழும்பில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிடும் உரையாடலைக் கேட்ட இந்தக் கைதி, பின்னர் இந்தக் கைதியையும் தாக்கியுள்ளனர்.
பல்லேகலையில் இருந்து மஹரவிற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட போது தான் அறிந்த அனைத்து தகவல்களையும் கொண்ட கடிதத்தை அவர் தன்னேகும்புர பொலிஸ் நிலையத்திற்கு எழுதி எறிந்துள்ளார்.
இந்தக் கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், குறித்த கைதியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றில் அனுமதி கோரினர். குறித்த விடயத்தை பரிசீலித்த நீதவான், குறித்த அதிகார எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தினால் கோரிக்கை விடுக்குமாறு உத்தரவிட்டார்.