கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலையத்தில் இருந்து தகவல் ஒன்றினை பெறுவதற்காக ஊடகவியலாளர் ஒருவர் அந்த பொலிஸ் நிலையத்தின் நிலையான தொலைபேசி இணைப்பிற்கு சுமார் 60க்கும் மேற்பட்ட தடவைகள் அழைப்பு மேற்கொண்டும் அந்த அழைப்பிற்கு பதில் கிடைக்கவில்லை.
பொலிஸ் நிலையங்களில் உள்ள நிலையான இணைப்புக்களானது மக்களது அவசர முறைப்பாடுகளுக்காகவும், சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்காகவும், வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்குமாகவே காணப்படுகின்றன.
ஆனால் அந்த நிலையான இணைப்புகளை பொலிஸார் சரியாக பேணுவதில்லை.
தொலைபேசி அழைப்பு
சிலர் தகவல்களை வழங்குதற்கு அல்லது தகவல்களை பெறுவதற்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் போது தமிழ் பொலிஸார் இல்லை என கூறிவிட்டு அழைப்பு துண்டிக்கப்படும்.
மீண்டும் அழைத்தால், நிலையான இணைப்பின் ரிசீவரானது எடுத்து தொலைபேசியில் இருந்து அகற்றப்பட்டு காணப்படும். இதனால் இரகசிய தகவல்களை மக்கள் வழங்க முடியாமல் போவதால் சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதுடன் மக்களது பாதுகாப்பும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.
இவ்வாறான செயற்பாடுகள் கிளிநொச்சியில் மாத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களிலும் இடம்பெறுகின்றன.
பொலிஸார் தமது வேலைப் பளுவை குறைப்பதற்காக இவ்வாறு அசமந்தமாக செயற்படுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்துகிறது. எனவே பொலிஸ் நிலையங்களில் உள்ள தொலைபேசிகளை பொலிஸார் சரியாக பேண வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாகும்.