2025 ஆம் ஆண்டிலிருந்து, சாதாரண தர பரீட்சையில் 5 அல்லது 6 பாடங்களாகக் குறைக்கப்படும் என கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் இந்த நாட்டில் பரீட்சை முறையில் விரிவான மாற்றம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும்.
மாணவர்களின் பரீட்சை சுமையை குறைக்கும் வகையிலும், தரத்தை உயர்த்தும் வகையிலும் 2025 ஆம் ஆண்டுக்குள் புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
பாடங்களின் எண்ணிக்கை
அதற்கைமைய, க.பொ.த சாதாரண தரத்தில் 9 பாடங்களின் எண்ணிக்கையை 5 அல்லது 6 பாடங்களாகக் குறைக்க உள்ளதாகவும், கட்டாயம் அல்லாத பிரிவு பாடங்களுக்கு பாடசாலை வாரியங்களால் நடத்தப்படும் பரீட்சை மூலம் மதிப்பெண் வழங்கும் முறை பின்பற்றப்படும் எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.
அதற்கான ஒரு முன்னோடி திட்டம் 2025 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஒரே நேரத்தில் 520 பாடசாலை வளாகங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தெரிவு
இதற்கு மேலதிகமாக தற்போது 5 இல் இருந்து உயர்தரப் பாடங்களின் எண்ணிக்கை 8-9 ஆக அதிகரிக்கப்பட்டு மாணவர்கள் தெரிவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், 1-13 தரங்கள் 1-12 ஆக குறைக்கப்பட்டு 12 ஆம் வகுப்பில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.