இஸ்ரேலுக்கும்- பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தீவிரமாகப் போர் இடம்பெற்று வரும் நிலையில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு தனது போர்க்கப்பலை அனுப்பிய விடயம் குறித்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது ”இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது விமானம் தாங்கிப் போர்க்கப்பலை அனுப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு இஸ்ரேலில் என்ன வேலை? காசாவிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குண்டுமழை வீசுவதற்கே அமெரிக்கா இந்த வேலையில் இறங்கியுள்ளது.
காசாவுக்குள் தண்ணீர் செல்லும் பாதைகள் நிறுத்தப்பட்டுள்ளதோடு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் மருத்துவமனைகள் செயற்படும் நிலையில் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை.
துரதிர்ஷ்டவசமாக, வழிபாட்டுத்தளங்கள், மருத்துவமனைகள், பாடசாலை என கருணையின்றி குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. உலகம் இதனை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. யாரும் எதுவும் சொல்வதில்லை. மனித உரிமைகளுக்கு என்ன ஆனது?” இவ்வாறு எர்டோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.