”இஸ்ரேலின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவுக்குள் மருத்துவப் பொருட்கள் அனுமதிக்கப்பட வேண்டும்” என ஐ.நாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் மீது பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் கடந்த 6 நாட்களாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் இராணுவமும் பலஸ்தீனத்தின் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக சுமார் 23 லட்சம் பேர் வசிக்கும் காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், காசாவுக்குச் செல்லும் மின்சாரம், குடிநீர், உணவு,எரிபொருள் உட்பட அனைத்து சேவைகளையும் தடுத்து நிறுத்தியுள்ளது.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உணவு, மருந்துக்கு திண்டாடும் நிலையில் உடமைகளை இழந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிடத் தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் இன்று காலை நிலவரப்படி சுமார் 4 லட்சம் பேர் காசாவில் இருந்து வெளியேறி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுது்து “உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் போன்ற உயிர் காக்கும் பொருட்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை , “இதுவரை வான்வழி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இனி தரைவழி தாக்குதலும் நடத்தப்படக்கூடும்” என இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.