சவூதி அரேபியாவில் வீட்டு பணிக்காக சென்ற இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் உடலுக்கு அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளரே தீயிட்டுள்ளார்.
கொத்தடுவ புதிய நகரில் வசித்து வந்த 45 வயதுடைய நயனா தில்ருக்ஷி என்ற பெண்ணே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். சுமார் 7 மாதங்களுக்கு முன்பு இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், பின்னர் சவுதி பொலிஸாரின் தலையீட்டில் தான் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது கடும் சிரமங்களுக்கு மத்தியில் சுமார் ஒன்றரை மாதங்களாக தடுப்பு முகாமில் வசித்து வருவதால், தம்மை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நயனா தில்ருக்ஷி என்ற பெண் இவ்வாறு வேலை செய்து கொண்டிருந்த போது, கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி வீட்டு உரிமையாளர், அவரது மனைவி , பிள்ளைகளுக்குச் சரியாகச் சாப்பாடு கொடுக்கவில்லை எனக் கூறி தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் நயனா தில்ருக்ஷியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர், வீட்டின் உரிமையாளர் தீயை அணைத்து, ஆம்புலன்ஸ் அழைப்பை ஏற்படுத்தி வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
எனினும், நயனா தில்ருக்ஷியே தனது உடலுக்கு தீ வைத்ததாக அந்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.