இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போரை உடனடியாக நிறுத்தி, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையே தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருகிறது.
பயங்கரவாத அமைப்பினாலும், அரச பயங்கரவாதத்தினாலும் இதுவரை ஆயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன.
இந்த யுத்தத்தினால் சிறுவர்கள், தாய்மார், பெண்கள், பொது மக்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அமைப்பிடம் நாம் ஒன்றை கேட்டுக் கொள்கிறோம்.
இந்த யுத்தத்தை உடனடியாக நிறுத்தி, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும்.
பாலஸ்தீன இராஜ்ஜியத்தை நாம் உறுதி செய்ய வேண்டும். பாலஸ்தீன இராஜ்ஜியம் தொடர்பான எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் வாழும், இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.