இந்தி நடிகை கரீனா கபூரும், நடிகர் சயீப் அலிகானும் 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தைமூர் என்ற பெயரை சூட்டி உள்ளனர். இந்தியா மீது படையெடுத்த தைமூர் மன்னன் பெயரை குழந்தைக்கு வைத்ததற்கு எதிர்ப்புகளும் கிளம்பின.
கரீனா கபூருக்கு தற்போது 36 வயது ஆகிறது. 2000-ம் ஆண்டில் இருந்து கதாநாயகியாக அவர் நடித்து வருகிறார். பிரசவத்துக்காக சில மாதங்கள் ஓய்வில் இருந்து விட்டு மீண்டும் நடிப்பதற்காக உடற்பயிற்சிகள் செய்து வருகிறார். இதுகுறித்து கரீனா கபூர் அளித்த பேட்டி வருமாறு:-
“நான் குழந்தை பெற்று தாயாகி இருக்கிறேன். ஆனாலும் ரசிகர்கள் முன்புபோல் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக எனது உடல் அழகில் அக்கறை செலுத்துகிறேன். பிரசவம் ஆனதும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக உணவு பழக்கங்களை மாற்றினேன். இதனால் உடல் தோற்றம் மாறி விட்டது. இப்போது பழைய மாதிரி உடலைக் கொண்டு வர கடும் உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன்.
பிரசவம் ஆனதும் நான் குண்டாகி விட்டதாக என்னை சந்திக்கிறவர்களெல்லாம் சொல்கிறார்கள். இது வருத்தம் அளித்ததால் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். தினமும் இரண்டு தடவை எடையை பரிசோதிக்கிறேன். பால், தயிர், நெய் சேர்த்து ரொட்டி மற்றும் வெல்லம் சாப்பிடுகிறேன். 2 வேளை மட்டுமே சாப்பாடு சாப்பிடுகிறேன்.
எது சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும். ஓய்வில்லாமல் நான் வேலையில் இருந்தாலும் நடைபயிற்சியை நிறுத்துவதே இல்லை. முன்பெல்லாம் வெளியே நடைபயிற்சி செய்வேன். இப்போது வீட்டுக்குள்ளேயே நடக்கிறேன். நான் உட்கார்ந்து இருந்தாலும் எனது பையன் விடுவது இல்லை. அழ ஆரம்பித்து விடுவான். ஓடிப்போய் தூக்கிக் கொண்டு வீட்டை சுற்றி நடக்க வேண்டி இருக்கிறது. உடல் எடையை குறைத்து மீண்டும் கதாநாயகியாக நடிப்பேன்”.
இவ்வாறு கரீனா கபூர் கூறினார்.