சிலுவை என்பது ஒரு தண்டனையுடன் தொடர்பு கொண்ட கருவியாகத்தான் பர்சியா (தற்போதைய ஈரான்) கீழை நாடுகளில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ரோம் போன்ற மேலைநாடுகளுக்கு இத்தண்டனைப் படிப்படியாகப் பரவியது. அரசுக்கு எதிராக கலகம் செய்தவர்கள், கொலையாளிகள், கொள்ளையர்கள் போன்ற கொடுங்குற்றவாளிகளுக்கு மட்டுமே அதுவும் அடிமைகளுக்கு மட்டுமே இத்தண்டனை வழங்கப்பட்டது.
ரோம் குடியுரிமைப் பெற்றவர்களுக்கு அவர்கள் எவ்வித குற்றம் செய்திருந்தாலும், இந்த சிலுவைத்தண்டனை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பழைய ஏற்பாட்டில் இஸ்ரேல் மக்களிடையே இந்தசிலுவைத் தண்டனை வழக்கில் இல்லவே இல்லை.
சிலுவை என்ற சொல் சிலுவை வடிவிலான + ஒரு மரத்தை குறிக்கிறது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஒரு நீண்ட மரத்தை தானே தன் தோளில் தீர்ப்பு நிறைவேறும் இடத்திற்கு சுமந்து சென்றவுடன் அந்த மரத்தை இரு துண்டுகளாக்கி + வடிவில் அமைத்து, அந்த குற்றவாளியின் கைகளையும், கால்களையும் மரத்தில் பதியும் வண்ணம் கட்டி அல்லது ஆணிகளால் தைத்து அந்த அறையப்பட்ட நபரோடுகூடிய சிலுவையை நிமிர்த்தி நட்டுக்காட்டுவது வழக்கமான தண்டனையாக இருந்தது. பெரும்பாலும் குற்றவாளிகள் அனைவரும் நிர்வாணப்படுத்தியே சிலுவையில் அறையப்பட்டனர்.
நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் பெரும்பாலும் பயந்து ஓடியிருப்பர். ஒரிருவர் துணிவுடன் அங்கே இருந்தால் அந்த நிர்வாணத்தை சிறு, சிறு துணிகளால் மறைப்பர். குற்றவாளியின் பெயரும் பட்டமும் ஒரு குறும்பலகையில் எழுதப்பட்டு, அவரது தலைக்குமேல் பொருத்தப்பட்டது. இந்த அவமானமிக்க கொடூரமான சிலுவைத்தண்டனையை கான்ஸ்டன்டைன் பேரரசன் கி.பி. 3-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட பிறகு வரலாற்றிலிருந்தே விலக்கி விட்டான். இதன் பிறகு எவரும் சிலுவையில் ஏற்றி கொல்லப்பட்டதாக வரலாறு இல்லை.
இயேசுபிரான் இறைமகனாக இருந்தும், குற்றமற்றவராக இருந்தும், பொய்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு பிலாத்து ஆளுநரால் தீர்ப்பளிக்கப்பட்டு சிலுவை சுமந்து சிலுவையிலேயே மரித்தார். இயேசுபிரான் அந்தச் சிலுவையைத் தொட்டதும் அது தண்டனைக்கருவி என்ற முகவரியை இழந்து மீட்பின் கருவி என்ற புதிய விலாசத்தைப் பெற்றது. அன்று சிலுவையை வெறுத்தவர்கள் இன்று அதை அன்பு செய்ய அணிதிரண்டனர். இயேசுபிரான் சிலுவைக்குப் புதிய அடையாளத்தை வழங்கினார்.