இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இராணுவப் படை தவறிழைக்க கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக எச்சரித்துள்ளார்.
இரண்டு வாரமாக தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் பாலஸ்தீன மக்கள் இதுவரை 4,600 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் தொடுத்த தாக்குதல்
இஸ்ரேலுக்கு அமெரிக்க நிர்வாகம் முழு ஆதரவளித்து வருவதுடன் ஆயுதங்களையும் குவித்து வருகிறது. இதனால் பாலஸ்தீன பகுதியில் உயிரிழப்பு வீதம் அதிகரித்தே காணப்படுகிறது.
இந்த நிலையில் ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக லெபனானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் படையான ஹிஸ்புல்லாஹ் களமிறங்கக் கூடும் என்ற தகவல் கசிந்து வருகின்ற நிலையில் லெபனான் எல்லையில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாஹ் படைகள் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டும் வருகின்றனர்.
ஹமாஸ் அமைப்பு
இந்த நிலையிலேயே ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாஹ் களமிறங்கினால் அது வாழ்நாள் தவறாக அமையும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.லெபனான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்தினரிடம் பேசும்போது, அவர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் களமிறங்கினால், லெபனான் மீது இஸ்ரேலின் பதிலடி உக்கிரமாக இருக்கும் எனவும், நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு பேரழிவாக இருக்கும் எனவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் நெதன்யாகு அச்சமடைகின்றாரா என்ற கேள்வியும் நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் லெபனானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் படையை பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆபத்தான அமைப்பு என்றே குறிப்பிட்டு தடை செய்துள்ளது.