புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
இயற்கை எரிவாயு எடுக்கப்பட்டால் நிலத்தடி நீர் இல்லாமல் போய்விடும், சுற்றுசூழல் மாசுபடும் அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று 16 ஆம் திகதி முதல் நெடுவாசலில் போராட்டங்கள் தொடங்கியது.
இந்த போராட்டத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக அரசும், நெடுவாசல் திட்டத்திற்கு மட்டும் அனுமதி கொடுக்க மாட்டோம் என்று சொல்லி இருக்கிறது.
அதனால் மத்திய அரசு மற்ற இடங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதி வழங்கினால் என்ன செய்வது.
அதனால் அனைத்து இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசும், மத்திய அரசும் உத்தரவு போடும் வரை எங்கள் போராட்டம் நடக்கும் என்று நல்லாண்டார் கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு கிராமங்களில் போராடி வரும் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நெடுவாசல் போராட்டம் மற்றும் அது தொடர்பான புகைப்படங்கள் அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் பரவிவருகிறது.
இதில் கலந்து கொண்ட சிறுவன் ஒருவன், தனது உடம்பில், முதுகில் குத்தாதே, அடிவயிற்றில் அடிக்காதே என்ற வசனத்தை எழுதி போராட்டத்தில் கலந்துகொண்டது உலக தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.