மின்சாரம் மற்றும் நீர்க்கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கே செல்ல வேண்டியேற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மின்கட்டணம், நீர்க்கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், எரிபொருள் கட்டணம் என அனைத்தும் உயர்வடைந்துள்ளமை மக்களுக்கு பெரும் சிரமம் என்பது தெரியும் எனவும், ஐக்கிய தேசியக் கட்சியினாலோ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டினாலோ இவை உயரவில்லை என்நும் குறிப்பிட்டடுள்ளார்.
எனினும், இதனை மேற்கொள்ளாமல் விட்டால் 2022 ஆம் ஆண்டில் இருந்த வரிசை யுகத்திற்கு செல்ல வேண்டியேற்பட்டுவிடும் என்பதால் நாம் மீண்டும் அந்த நிலைமைக்கு செல்வதா – இல்லையா என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒன்று இல்லை என்பதால், நாடு ஏதும் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்கவில்லை எனவும், ஆனால், ஜனாதிபதித் தேர்தலோ பொதுத் தேர்தலோ நடத்தாவிட்டால், நாடு பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
எனவே, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து நாம் செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.