இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவர் முரளிவிஜய்.
தமிழகத்தை சேர்ந்த அவர் 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது.
32 வயதான முரளிவிஜய் 50-வது டெஸ்டில் விளையாட இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரில் வருகிற 4-ந்தேதி தொடங்கும் போட்டி அவரது 50-வது டெஸ்ட் ஆகும்.
50-வது டெஸ்டில் விளையாடும் 2-வது தமிழக வீரர் முரளிவிஜய் ஆவார். கேப்டனாகவும், நடுவராகவும் பணிபுரிந்த எஸ்.வெங்கட்ராகவன் 57 டெஸ்டில் விளையாடி இருக்கிறார். 50-வது டெஸ்டில் விளையாடும் 30-வது இந்திய வீரர் ஆவார். தற்போது உள்ள இந்திய அணியில் இஷாந்த்சர்மா 77 டெஸ்டிலும், கேப்டன் வீராட்கோலி 55 டெஸ்டிலும் விளையாடி உள்ளனர்.
அணியில் உள்ள மற்றொரு தமிழக வீரரான ஆர்.அஸ்வின் 46 டெஸ்டில் ஆடி இருக்கிறார்.
முரளிவிஜய் 49 டெஸ்டில் (84 இன்னிங்ஸ்) 3307 ரன் எடுத்துள்ளார். சராசரி 39.84 ஆகும். 9 சதமும், 14 அரைசதமும் எடுத்துள்ளார். 2013-ம் ஆண்டு ஐதராபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 167 ரன் குவித்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.
அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 4 சதம் எடுத்துள்ளார். மேலும் 2-வது டெஸ்ட் நடைபெறும் பெங்களூர் ஆடுகளத்தில் அவர் 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 139 ரன் எடுத்து இருந்தார்.
புனேயில் நடந்த முதல் டெஸ்டில் முரளிவிஜய் 2 இன்னிங்சிலும் சேர்த்து 12 ரன்களே எடுத்தார். தனது 50-வது டெஸ்டில் முரளிவிஜய் முத்திரை பதிக்கும் வகையில் விளையாடுவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.