போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி, மீறல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இலங்கைக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை, கொழும்பில் நேற்றுமுன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்த போது இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அரசாங்கம், 2015-ம் ஆண்டு இணக்கம் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த விடயத்தில் சிறிலங்கா எதையுமே செய்யவில்லை.இலங்கைக்கு 8 மாத காலஅவகாசம் அளிக்கப்பட்ட போதும், தனது கடப்பாடுகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.
தீர்தானம் நிறைவேற்றப்பட்டு 18 மாதங்கள் கடந்து விட்ட போதிலும், இலங்கைக்கு ஊக்குவிக்கப்பட வேண்டும், அவர்கள் இணங்கியதை நிறைவேற்ற வேண்டும்.
அதற்கு, இலங்கைக்கு மேலதிக காலஅவகாசம் அளிக்கப்பட வேண்டும் என நாம் ஐ.நா மனித உரிமை ஆணையாளரையும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளையும் நாம் கோரியுள்ளோம்.
காணாமற்போனோர், இராணுவம் வசமுள்ள தனியார் காணிகள், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் போன்ற பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.
2015 தீர்மானத்தை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கும் பொறிமுறை ஒன்றை ஐ.நா மனித உரிமைகள் பேரவை உருவாக்க வேண்டும் என சுமந்திரன் தெரிவித்தார்.