காசாவைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பின் தூதுக்குழு தற்போது மொஸ்கோவிற்கு விஜயம் செய்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
எனினும், இது தொடர்பான மேலதிக விவரங்கள் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை.
மொஸ்கோவிற்கு வருகை தந்தவர்களில் மூத்த ஹமாஸ் உறுப்பினர் அபு மர்சூக் அடங்குவதாக பாலஸ்தீனிய தூதுக்குழுவின் ஆதாரத்தை மேற்கோள் காட்டி ரஷ்ய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு பணயக்கைதி
காசா பகுதியில் பிடித்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணயக்கைதிகளை உடனடியாக விடுவிப்பது குறித்து ரஷ்ய தரப்பிலிருந்து மூத்த ஹமாஸ் உறுப்பினர் அபு மர்சூக் இடம் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பாலஸ்தீனிய எல்லையில் இருந்து ரஷ்ய மற்றும் பிற வெளிநாட்டு குடிமக்களை வெளியேற்றுவதை உறுதி செய்வது தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், ஈரான், ஹமாஸ் உட்பட மத்திய கிழக்கில் உள்ள அனைத்து முக்கிய தரப்புகளுடனும் ரஷ்யா உறவுகளைக் கொண்டுள்ளது.
இராஜதந்திர தோல்வி
மத்திய கிழக்கின் தற்போதைய நெருக்கடிக்கு அமெரிக்க இராஜதந்திரத்தின் தோல்வியே காரணம் என்று மொஸ்கோ மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் அமைதி தீர்வைக் கண்டறியும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் அலி பகிரி கனியும் தற்போது மொஸ்கோவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும், ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் கலுசினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஜகரோவா கூறினார். பகிரி கனி ஈரானின் தலைமை அணுசக்தி பேச்சுவார்த்தையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.