பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான பயணம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்களை இந்தியாவின் முன்னாள் துணை தூதர் நடராஜன் வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட போது புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளவில்லை.
இதற்கான காரணம் என்ன என்பதை நடராஜன் கூறியுள்ளார்.
நல்லூர் கோவில்
பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தபோது நல்லூர் கோவில், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு,அவரை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது.
இது தொடர்பாக நல்லூர் கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி குமாரதாச மாப்பன முதலியாருடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது.
அப்போது, கோவிலுக்குள் மேலாடை அணியாமல்தான் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே கோவில் நடை திறக்கப்படும் என்ற மரபுகளில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என நல்லூர் தேவஸ்தான அதிகாரி திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால் நல்லூர் முருகன் கோவிலுக்கு பிரதமர் மோடியால் செல்ல முடியவில்லை. எனினும் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
அப்போது அங்கு 98 வயதான நகுலேஸ் குருக்கள் உடனிருந்தார். தற்போது அவர் காலமாகிவிட்டார் என்று ஏ.நடராஜன் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நூல்
யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதராக ஏ.நடராஜன், 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.
இந்தநிலையில் அவர், ‘From the Village to the Global Stage’ என்ற தலைப்பில் புதிய நூல் ஒன்றை எழுதி உள்ளார்.
இந்த நூல் விரைவில் கோவையில் வெளியிடப்படவுள்ளது.
இந்த நூலில் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.