21ம் நூற்றாண்டான இவ்வுலகில் பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை பெண்கள் யாருக்குமே பாதுகாப்பு இல்லை.
பள்ளி கல்லூரி முதல் வேலை பார்க்கும் அலுவலகம் வரை பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே
நாள்தோறும் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி அனைத்திலும் பெண் கடத்தல், கற்பழிப்பு போன்ற செய்திகளே ஏராளம்.
ஒரு பெண் பாதிக்கப்பட்டால் அவளது உடைகள் காரணம் என சொல்லப்படுகிறது.
அப்படியானால் மூன்று வயது குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது ஏன்?
உடுத்தும் உடை மட்டும் காரணம் அல்ல பார்ப்பவர்களின் எண்ணங்களே முக்கிய காரணம்.
மிக முக்கியமாக பெண் பாதிக்கப்பட்டால் அவளை இந்த சமூகம் எப்படி பார்க்கும்?
குற்றவாளியை விட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே தண்டனைகள் அதிகம்.
பெரும்பாலான சூழ்நிலையில் சமுதாயத்தில் இருந்தே ஒதுக்கி வைக்கப்படுவதால், மனதளவிலும் பாதிப்படைந்த பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன? பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டெடுப்பது எப்படி? குடும்ப உறவுகள்/நண்பர்கள் என்ன செய்யலாம்?
இதோ உங்களுக்கான அறிவுரைகள்
முதலில் உங்கள் நண்பரோ, குடும்ப உறுப்பினரோ பாதிக்கப்பட்டிருந்தால் எந்த சூழ்நிலையில் இப்படி நடந்தது? என்ன பிரச்சனை? முன்விரோதமா? யார் குற்றவாளி? ஏன் இப்படி செய்தான்? என பல கேள்விகளுக்கு விடையினை தெரிந்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபருடன் ஒன்றாக அமர்ந்து பேசி, உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்.
உங்களை முழுவதும் அவர் நம்ப வேண்டும், இதுவே மிகவும் முக்கியமானது.
அவரிடம் பேச முடிவெடுத்த பின்னர் நீங்கள் உரையாட போகும் நேரம், இடம் ஆகியவற்றை முன் கூட்டியே முடிவு செய்து கொள்ள வேண்டும்
இடம், பொருள், ஏவல் என்பது முக்கியமான ஒன்று. நீங்கள் பேசுவதை யாரும் ஒட்டு கேட்கிறார்களா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை நீங்கள் பேசுவதை அவரிடம் தவறாக நடந்து கொள்பவரே கேட்க நேர்ந்தால் அதுவே ஆபத்தாக முடியலாம்.
உரையாடும் போது அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேச வேண்டும். அவருக்கு ஆதரவாக இருப்பீர்கள் முழு அக்கறை அவர் மேல் உள்ளது என உணர வைக்க வேண்டும்.
ஒருசில நேரங்களில் நீங்கள் செலுத்தும் அக்கறையே கூட எதிர்மறை எண்ணங்களை அவர்கள் மனதில் விதைக்கலாம். இதற்கெல்லாம் இடம்கொடுக்கா வண்ணம் நீங்கள் பேச வேண்டும்.
முதலில் அவர்களுடைய பிரச்சனையை தெளிவாக காதுகொடுத்து கேட்டுவிட்டு, அதிலுள்ள தவற்றை சுட்டிக்காட்டலாம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கும் மையங்கள் மற்றும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான முகாம்கள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க நீங்கள் தான் அவரை ஊக்கப்படுத்த வேண்டும்.
அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், வழக்கறிஞர் அல்லது சட்ட ஆலோசகரை ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.
பாதிக்கப்பட்டவருக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களை பாதுகாப்பதும் அவசியமாகிறது.
ஓரளவு புரிந்துகொள்ளும் குழந்தைகளாக இருப்பின், நடந்த விடயங்கள் பற்றி அவர்களிடமே பேசலாம்.
தவறான எண்ணங்களை சமூகமே குழந்தைகள் மனதில் விதைக்கும் முன் நாமே கூறிவிடுவது நல்லது.
குறிப்பாக பொருளாதார ரீதியாகவும் அவரை தயார் செய்ய வேண்டும்.
நாம் என்னதான் அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கினால் பாதிக்கப்பட்ட நபர் மனரீதியாக தயாராக வேண்டும்.
அவர்களுக்கு பிடித்த இசை, சுற்றுலா இடங்களுக்கு அழைத்து செல்லலாம்.
வெளியே வர சம்மதம் தெரிவித்த பின்னர் பாதுகாப்போடு அவர்களை அழைத்து செல்வது அவசியம்.
கடவுளின் அற்புத படைப்பான பெண்கள் சாதிக்கத்தானே தவிர வீழ்வதற்கு அல்ல!!!
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு என்ற பாரதியின் புதுமைப் பெண்ணாய் அவதாரம் எடுங்கள்!!!