அரசியலமைப்பு பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு ஐந்து இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனையை அமைச்சரவை நிராகரித்துள்ளதாக நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பிரேரணை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இவ்வளவு பெரிய தொகையை தற்போதைக்கு செலுத்த முடியாது என அமைச்சரவை உறுப்பினர்கள் தெரிவித்ததாகவும் தெரியவருகிறது.
புதிய பிரேரணை
இதன் காரணமாக கொடுப்பனவு தொகையை மீளாய்வு செய்து புதிய பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு வழமையான முறையில் அந்த பதவியில் பணியாற்ற வாய்ப்பு வழங்கினால், மேலதிக கொடுப்பனவுகளுக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை என ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.