வவுனியா வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சல் காரணமாக சிக்சை பெற்று வந்த இளம் தாயொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிக்கையில்,
கடந்த 22ஆம் திகதி இனங்காணப்பட்ட 25 வயதுடைய ஹெப்பிட்டிக்கொலவ பகுதியைச் சேர்ந்த பெண் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவருக்கு குழந்தை பிறந்து ஒரு கிழமை கடந்த நிலையில் பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு முகங்கொடுந்திருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை , 37 வயதுடைய பூவரசம்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு தீவிரசிகிச்சையளிக்கப்பட்டு அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர மேலும் ஐவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பன்றிக்காச்சல் ஏற்பட்டவர்களை பார்வையிடுவதற்கு கர்ப்பிணி தாய்மார், சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வரவேண்டாம் என என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.