மின் உற்பத்தி நிலையங்களைத் தனியாருக்கு வழங்குவது குறித்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனவரி மாதம் முதலாம் திகதி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஜூலை மாதம் முதலாம் திகதி அக்டோபர் மாதம் முதலாம் திகதி ஆகிய திகதிகளில் மின் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆனாலும் அக்டோபர் மாதத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால் ஜனவரி மாதத்தில் திருத்தம் மேற்கொள்ளாமல் அடுத்த வருடத்திற்கான முதலாவது கட்டண திருத்தத்தை ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.
மின்சாரதுறையில் முன்னெடுக்கப்படும் சீர்சிருத்தங்கள் குறித்து குறித்த துறையில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளுடன் கடந்த 10 மாதங்களில் பல்வேறு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம்.
இதன்மூலம் ஊழியர்களுக்கு பிழையான கருத்து ஒன்று உட்புகுத்தப்படுகின்றது.
அனைத்து நீர்மின் உற்பத்தி நிலையங்களும் வெளிநாட்டு மூதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட போவதாகவும் ஆதாரமற்ற தகவல்களை கூறுகின்றார்கள்.
இவ்வாறான யோசனை ஒன்று இந்த புதிய சட்டமூலத்தில் இருந்தால் எனக்கு காண்பிக்குமாறு நான் சவால் விடுக்கின்றேன்.
100 வீதம் நீர் மின் உற்பத்தியானது நம் நாட்டு அரசாங்கத்தின் கீழேயே செயற்படும் என்று மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஆனாலும் ஏனைய மின் உற்பத்தி நிலையங்களை தனியாருக்கு வழங்குவதா அல்லது அரசாங்கத்தின் கீழ் செயற்படுத்துவதா என்பது குறித்து கலந்தாலோசிக்கப்படுகின்றது.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைளின் ஊடாக நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்கவும் மக்களின் சுமைகளை குறைக்கவுமே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
சம்பள அதிகரிப்பு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரியே நாளை போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த விடயத்திற்கு நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம்” என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.