மீதொட்டமுல்ல காணி வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 20ஆம் திகதி சோபித ராஜகருணா, டி.என்.சமரகோன், சம்பத் அபேகோன், கெமா ஸ்வர்ணாதிபதி மற்றும் பி.குமரன் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மீதொட்டமுல்ல காணி விவகாரம் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஐந்து வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2016 மே மாதம், மீதொட்டமுல்லையில் 322 பேர்ச்சஸ் காணியின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டி, அப்போதைய மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார்.