அண்மைக்காலமாக பெற்றோர்களினதும், பெரியோர்களினதும் கவனயீனத்தால் பல சிறுவர்கள் உயிர் இழந்துள்ளதுடன் பலர் ஊனமுற்றுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக பல தடவைகள் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும் நேற்று இவ்வாறான பரிதாபகரமான சம்பவமொன்று திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில் இடம்பெற்றதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கமலதாசன் சீதையம்மாள் அவர்களின் இரண்டாவது புதல்வி வஸ்மிளா ஒன்றரை வயது நிரம்பிய சிறுமி பெற்றோர்களின் கவனயீனத்தினால் தனது வீட்டின் மாடிப்படியிலிருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது தாய் மற்றும் பாட்டி வீட்டில் இருந்துள்ளதுடன் அவர்கள் வேலை செய்துக் கொண்டிருந்த இருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உடனடியாக பாதிப்புக்குள்ளான சிறுமி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் போது சிறுமி மரணமடைந்ததாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைகளின் பின் சிறுமியின் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.