சுதந்திரமான ஜனநாயக சமூகத்தில் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்த முடியும் என்பதுடன் விமர்சனங்களையும் முன்வைக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த ஜனநாயக சுதந்திரத்தை உச்சமாக பயன்படுத்தி நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
லக்சந்த செவன தொடர்மாடி வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மக்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நாடு என்ற வகையில் நம்பிக்கையுடன் சிந்திக்க வேண்டும் என்ற போதிலும் இலங்கையில் மூடநம்பிக்கையான எண்ணங்கள் அதிகரித்துள்ளன.
இந்த மூட நம்பிக்கை காரணமாக மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். மூடநம்பிக்கைகளுக்கு ஊடகங்களிலும் தற்போது அதிக இடம் வழங்கப்படுகிறது.
ஊடக நிறுவனங்கள் தமது பிரபலத்திற்காக அரசாங்கத்தின் மீது நடத்தும் தாக்குதல் சந்தர்ப்பங்கள் இருந்த பொழுதிலும் இதன் மூலம் மக்களுக்கு உண்மையான யதார்த்தம் கிடைப்பதில்லை.
இப்படியான நிலைமையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தவறாக பயன்படுத்தி நாட்டுக்கு சேதத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.