சாய்பாபா சீரடியில் இருந்தாலும், தமது பக்தர்களை கனவு மூலம் ஆட்கொள்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். அதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் வரலாற்றில் பதிவாகி உள்ளன.
அவற்றில் சின்ன கிருஷ்ணா என்பவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சற்று வித்தியாசமானது. அவர் இளம் வயதில் இருந்தே மகா விஷ்ணுவின் தீவிர பக்தராக இருந்தார். இவர் அடிக்கடி ஆழ்நிலை தியானம் செய்யும் பழக்கம் உடையவர்.
1910-ம் ஆண்டு ஒருநாள் இரவு அவர் ஒரு கனவு கண்டார்.
அதில், ஒருவர், ஒரு முதியவரை சுட்டிக்காட்டி, இந்த சாய்பாபா உன்னுடையவர். நீ அவரை சென்றடைவது நல்லது என கூறுவது போல இருந்தது. கனவில் இருந்து விடுபட்ட சின்ன கிருஷ்ணனுக்கு எதுவும் புரியவில்லை.
மீண்டும் படுத்துத் தூங்கிய அவருக்கு மேலும் ஒரு கனவு வந்தது. அதில் ஒரு கிராமம் தெரிந்தது. அதை சீரடி என்று கூறினார்கள்.
சிலர் கிருஷ்ணாவை அழைத்து சென்று சாய்பாபாவிடம் அறிமுகம் செய்வது போன்றும் கனவில் தெரிந்தது. அந்த கனவு அதோடு முடிந்து போனது.
மறுநாள் காலை கண் விழித்ததும் சின்ன கிருஷ்ணாவுக்கு அந்த கனவு பற்றியே எண்ணம் சுழன்றது. சாய்பாபா பற்றி அவர் ஏற்கனவே அறிந்திருந்தாலும், அவர் தம்மை இப்போதுதான் அழைக்கிறார் என்பதை உணர்ந்தார்.
மறுநாளே சின்ன கிருஷ்ணா சீரடிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது சீரடி மண் சுவர் குடிசைகளுடன் குக்கிராமமாக இருந்தது. தான் கனவில் கண்டது போலவே அந்த கிராமம் அமைந்திருந்ததைப் பார்த்து கிருஷ்ணா ஆச்சரியம் அடைந்தார்.
துவாரகமாயி மசூதிக்கு சென்று சாய்பாபாவை சந்தித்தார். ஆனால் கிருஷ்ணாவுக்குள் திடீரென ஒரு சந்தேகம் எழுந்தது.
சாய்பாபாவும் நம்மைப் போல ஒரு மனிதர் தானே. நாம் ஏன் அவரை வழிபட வேண்டும்? என்று நினைத்தார்.
அடுத்த வினாடி சாய்பாபா புன்னகைத்தப்படி தன் தலையை உயர்த்தி சின்ன கிருஷ்ணாவை பார்த்தார். பிறகு “நீ ஒரு மனிதனை வழிபடுவதா?” என்றார். இதைக் கேட்டதும் சின்ன கிருஷ்ணாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
என்றாலும் தன் கனவை உறுதிபடுத்தும் வகையில் எதுவும் நடக்காததால் அவர் தவிப்புடன் இருந்தார். அதற்குள் மதியமாகி விட்டது. அனைவரும் எழுந்து சாப்பிடச் சென்றனர்.
பிற்பகல் நேரத்தில் சாய்பாபா சற்று தனிமையில் இருப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார். அவரை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக துணித்திரைப் போட்டு மறைத்து விடுவார்கள்.
அதை விலக்கி சந்திக்க முயன்றால் பாபா கடுமையாக கோபம் கொள்வார். ஆனாலும் சின்ன கிருஷ்ணா பயப்படவில்லை. யோசிக்கவில்லை. திரையை விலக்கி விட்டு பாபா அருகில் சென்றார்.
பாபா அவரைப் பார்த்து சிரித்தார். அருகில் வருமாறு அழைத்தார். பிறகு சின்ன கிருஷ்ணாவைப் பார்த்து, “நீ என் குழந்தை. புதிதாக இங்கு மற்றவர்கள் வரும்போது நாங்கள், எங்கள் குழந்தைகளை எம் அருகில் நெருங்க விடுவதில்லை” என்றார்.
பாபாவின் இந்த வார்த்தைகளால் சின்ன கிருஷ்ணா நம்பிக்கைக் கொண்டார். சீரடியிலேயே தங்கியிருந்தார்.
மற்றொரு நாள் பிற்பகலில் சாய்பாபாவை, சின்ன கிருஷ்ணா சந்தித்தார். அப்போது பாபா, “எல்லையற்ற எனது களஞ்சியம் இப்போது உன் கையில் உள்ளது. உனக்கு என்ன வேண்டுமோ, திறந்து எடுத்துக் கொள்” என்றார்.
அதற்கு சின்ன கிருஷ்ணா “நான் இனி எத்தனைப் பிறவிகள் எடுப்பேன் என்று எனக்குத் தெரியாது. நான் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும், அத்தனைப் பிறவிகளிலும், நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும்” என்றார். அதை பாபா ஏற்றுக் கொண்டார்.
அன்று முதல் சின்ன கிருஷ்ணா அடிக்கடி சீரடி வந்து சென்றார். அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு செயலிலும் சாய்பாபா கலந்திருந்தார்.
பலராம் மன்கர் என்ற பக்தருக்கும் சாய்பாபா இதே போன்ற ஒரு அனுபவத்தை ஏற்படுத்தினார். பலராம் மன்கர் தன் மனைவி மரணம் அடைந்ததும் குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் மகனிடம் ஒப்படைத்து விட்டு, சீரடியில் வந்து தங்கி விட்டார்.
பாபாவை தினமும் தரிசித்தாலும், அவர் மனதுக்குள் பாபா எங்கும் வியாபித் துள்ளாரா? அல்லது சீரடியில் மட்டுமே இருக்கிறாரா? என்ற எண்ணம் நெருடலாக இருந்து கொண்டே இருந்தது.
ஒருநாள் அவரை பாபா அழைத்தார். தன் சட்டைப் பைக்குள் இருந்து 12 ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.
பிறகு, “ நீ சதாரா தாலுகாவில் உள்ள மச்சீந்திராகாட் எனும் புனிதத்தலத்துக்கு போ. அங்குள்ள ஆலயத்தில் தியானம் செய். உனக்கு மேலும் ஆன்மிக முன்னேற்றம் உண்டாகும்” என்றார்.
பாபா உத்தரவை ஏற்று பலராம் மன்கர் அன்றே மச்சீந்திரா காட் புறப்பட்டார். அங்கு ஒரு அறை எடுத்து தங்கி இருந்து தியானத்தில் ஈடுபட்டார்.
ஒருநாள் அவர் எதிரில் பாபா தோன்றினார். ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த அவர் பாபா பாதங்களைத் தொட்டு வணங்கினார். பிறகு “ஏன்…. பாபா, என்னை இங்கு வரச் சொன்னீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு சாய்பாபா, “நீ சீரடியில் இருந்த போது உன் எண்ணத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. நான் சீரடியில் மட்டுமே இருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அது தவறு என்பதை உணர்த்தவே உன்னை இங்கு வரச் சொன்னேன். சீரடியில் நான் எப்படி இருப்பேனோ, அப்படியே இருக்கிறேனா?” என்றார்.
பலராம் மன்கர் கண்ணீர் விட்டு கதறி மன்னிப்புக் கோரினார். உலகமே சாய்பாபாவின் கடைக்கண் பார்வைக்குள் இருப்பதை சந்தேகமின்றி உணர்ந்தார்.
மற்றொரு நாள் அவர் புனாவில் இருந்து தாதர் செல்ல ரெயில் நிலையத்துக்குச் சென்றார். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் டிக்கெட் எடுக்க இயலவில்லை.
அப்போது கம்பளிப் போர்வையைப் போர்த்தியபடி வயதான ஒரு கிராமத்துக்காரர் அங்கு வந்தார். அவர் மன்கரிடம், “நான் தாதருக்கு செல்ல டிக்கெட் வாங்கி இருந்தேன். பயணத்தை ரத்து செய்து விட்டேன். நீங்கள் வேண்டுமானால் இந்த டிக்கெட்டில் செல்லுங்கள்” என்று கூறி டிக்கெட்டை கொடுத்தார்.
மகிழ்ச்சியோடு டிக்கெட்டை பெற்றுக் கொண்ட மன்கர், அதற்கு பணம் கொடுக்க தனது கைப்பைக்குள் தேடினார். பிறகு நிமிர்ந்தபோது அந்த கிராமத்து நபர் மறைந்திருந்தார். ரெயில் நிலையத்தில் எங்கு தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பாபாவே வந்து இந்த அற்புதத்தை நடத்தியதாக மன்கர் நம்பினார். தாதர் சென்ற அவர் பிறகு சீரடி சென்று, அங்கே நிரந்தரமாக தங்கி விட்டார்.
இப்படி அற்புதங்கள் செய்த சாய்பாபா, ஆங்கிலேய ர்களிடம் இருந்து இந்தியாவுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்பதையும் ஒரு தடவை சூசகமாக உணர்த்தினார். பாலகங்காதர திலகரிடம் சாய்பாபா நிகழ்த்திய அந்த அற்புதத்தை அடுத்த வாரம் (வியாழக்கிழமை) காணலாம்.