சூரியக்குடும்பத்தில் உள்ள பெரிய துணைக்கோள் சந்திரன். இதற்கு நிலா, நிலவு, திங்கள், மதி என்ற பெயர்களும் உண்டு. இது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதற்காக சந்திரன் எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் 29½ நாட்கள் ஆகும்.
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது. பூமி தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்க ஒரு ஆண்டு என்பதும் விஞ்ஞானிகளின் ஆய்வின் முடிவு.
“அவனே சூரியனை ஒளியாகவும் (பிரகாசமாகவும்) சந்திரனை (அழகிய) வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கி ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவைகளுக்கு (மாறி மாறி வரக்கூடிய) தங்கும் இடங்களையும் நிர்ணயம் செய்தான். மெய்யான தக்க காரணமின்றி இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை” (10:5) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
நிலவின் கலைகள் என்பது நிலவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவாகத் தெரியும் தனித்தனி நிலைகளைக் குறிக்கும். இதை ‘பிறை’ என்று சொல்வது வழக்கம். முதல் நாள் நிலவே தெரியாது. இரவு மிக இருட்டாக இருக்கும். இதை ‘அமாவாசை’ என்பார்கள். பிறகு ஒவ்வொரு நாளும் சிறு சிறு நிலா (வெளிச்சம் தெரியும் பகுதி) பெரிதாகிக் கொண்டே வரும். பிறகு 14 நாட்கள் கழித்து ஒருநாள் ‘முழு நிலா’ பெரிதாய் வட்ட வடிவமாய்த் தெரியும். இதைப் ‘பவுர்ணமி’ என்று அழைப்பார்கள். பின்னர் சில நாட்கள் நிலா சிறுக சிறுக தேய்ந்து கொண்டே போய் மீண்டும் ‘அமாவாசை’ வரும்.
சந்திரன் முழு நிலா வரை வளர்ந்து வருவதை ‘வளர் பிறை’ என்றும், அடுத்த சுமார் 14 நாட்களைத் ‘தேய்பிறை’ என்றும் அழைக்கிறார்கள்.
“(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மடலைப் போல் (பிறையாக) ஆகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தி இருக்கின்றோம்” (36:39) என்பது இறை வசனம்.
காலக்கணக்கு எனப்படும் ஆண்டுகளின் எண்ணிக்கை, மாதங்களின் எண்ணிக்கை மற்றும் வாரங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட சந்திரனின்நிலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சூரியன் உதிப்பதில் இருந்து மறையும் வரை எவ்வாறு நாளானது பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றதோ, அதைப்போல ஒவ்வொரு நாளும் இரவில் தோன்றி மறையும் சந்திரனின் நிலைகள் மாதங்களின் எண்ணிக்கையை அறிய உதவுகிறது. இவற்றை மேற்கண்ட இரு வசனங்களும் எடுத்துரைக்கின்றன.
எவ்வாறு பழைய பேரீச்ச மடல் பல நெளிவுகளைக் கொண்டுள்ளதோ, அதேபோல சூரியனைப் பூமியோடு சுற்றி வரும் சந்திரனின் பாதையும் பல்வேறு வளைவுகளைக் கொண்டுள்ளது. இதை நவீன விஞ்ஞானத்தின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் குர்ஆன் கூறும் பழைய பேரீச்ச மடல் உவமை மிகப் பொருத்தமாக அமைந்துள்ளதை அறியலாம்.
மேலும், “(நபியே!) மாதந்தோறும் வளர்ந்து தேயும்) பிறைகளைப் பற்றி உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: ‘அவை மனிதர் களுக்கு (ஒவ்வொரு மாதத்தையும்) ஹஜ்ஜுடைய காலங்களையும் அறிவிக்கக் கூடியவை” (2:189) என்று திருமறை கூறுகிறது.
சந்திரன் சுயமாகத் தனது பால் ஒளியை வெளிப்படுத்திக் கொள்கிறது என்று பழங்காலத்தில் மக்கள் நம்பி வந்தனர். ஆனால் இன்றோ நிலவின் ஒளி, பிரதிபலிக்கப்பட்ட ஒளியேயாகும் என்ற உண்மையை விஞ்ஞானிகள் வெளிஉலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.
“அவற்றுக்கிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும், ஒளிர்கின்ற சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியவான்” (25:61) என்றும்,
“இன்னும் அவற்றில் சந்திரனை பிரகாசமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்” (71:16) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
திருக்குர்ஆனில் சூரியனையும், சந்திரனையும் பற்றி மக்களுக்கு விளக்குவதற்காக அறிவியல்பூர்வமான அழகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
திருக்குர்ஆனில் சூரியனைச் சுட்டும் அரபுச் சொல், ‘ஷம்ஸ்’. இதை ‘ஸிராஜ்’ (ஒளி விளக்கு), ‘வஹ்ஹாஜ்’ (பிரகாசிக்கும் விளக்கு), ‘லியா’ (ஒளிரும் மகிமை) என்றும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
சூரியன் கடும் வெப்பத்தையும், வெளிச்சத்தையும் கொண்டது. எனவே திருக்குர் ஆனில் சூரியனைக் குறிக்க பயன்படுத்தும் மூன்று வர்ணனை வார்த்தைகளும் பொருத்தமானவை.
சந்திரனைக் குறிக்கும் அரபுச் சொல், ‘கமர்’ என்பதாகும். மேலும் திருக்குர்ஆன் சந்திரனை ‘முனீர்’ என்றும் வர்ணிக்கிறது. முனீர் என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று அர்த்தம். இதன் மூலம் சந்திரன் சுயமாக ஒளியை வழங்குவதில்லை. சூரிய ஒளியைப் பெற்றுப் பிரதிபலிக்கிறது என்பது புலனாகிறது.
திருக்குர்ஆனில் எந்த இடத்திலும், சந்திரனைக் குறித்திட ‘ஸிராஜ்’ ‘வஹ்ஹாஜ்’ ‘லியா’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவில்லை. அதைப்போல சூரியனைக் குறித்திட ‘நூர்’ அல்லது ‘முனீர்’ என்ற சொற்கள் சொல்லப்படவில்லை.
இதன் உள்ளார்ந்த பொருள் என்னவென்றால், சூரிய ஒளிக்கும், நிலவொளிக்கும் உள்ள இயல்பான வேறுபாட்டை ‘வார்த்தை விளையாட்டு’களின் மூலம் திருக்குர்ஆன் வெளிப்படுத்தியுள்ளது.