2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியின் போது வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்த் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அவருக்கு ஆயுள்கால தடை விதித்தது. ஆனால் 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்ரீசாந்த் உள்ளிட்டவர்களை சூதாட்ட குற்றச்சாட்டில் இருந்து டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு விடுவித்தது.
கோர்ட்டு விடுவித்தாலும் கிரிக்கெட் வாரியம் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடையை நீக்கவில்லை. ஸ்காட்லாந்தில் ஏப்ரல் மாதம் நடைபெறும் ‘லீக்’ போட்டியில் விளையாட தனக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு ஸ்ரீசாந்த் கேட்டு இருந்தார். ஆனால் கிரிக்கெட் வாரியம் வழங்க மறுத்துவிட்டது.
இதை தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழுவிடம் தனது ஆயுட்கால தடையை நீக்ககோரி முறையிட்டார். புதிய நிர்வாக குழுவும் எந்த முடிவையும் தெரிவிக்காமல் இருந்தன.
இந்த நிலையில் தன் மீதான ஆயுட்கால தடையை நீக்ககோரியும், தடையில்லா சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரியும் ஸ்ரீசாந்த் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.