மட்டக்களப்பு மயிலுத்தமடு பண்ணையாளர்கள் விவகாரம் தொடர்பாக கள நிலவரங்களை அறிந்து கொள்வதற்காக மயிலத்த மடுவுக்குச் சென்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிலர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
மயிலத்தமடுவில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தில் இருந்த பொலிஸார் குறித்த தரப்பினரை இன்று (09.11.2023) தடுத்து நிறுத்தி அவர்களை உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை எனவும் தெற்கை தளமாக கொண்டு செயல்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெனான்டோ தெரிவித்துள்ளார்.
உண்மைகளை கண்டறியும் நோக்கம்
தொடர்ச்சியாக இன்றுடன் 56வது நாளாக தங்களது நில மீட்புக்கோரிய போராட்டத்தில் பண்ணையாளர்கள் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அந்தப் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக உண்மைகளை கண்டறியும் நோக்கத்துடன் தெற்கில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வந்து அதனுடைய உண்மை நிலையை அறிவதற்காக குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
அம்பிட்டியே சுமன ரத்தின தேரரின் பொய்ப்பிரச்சாரம் ஒரு பக்கம் பண்ணையாளரின் நில மீட்புக்கான அறவழிப் போராட்டம் ஒரு பக்கம் அத்துமீறிய சிங்கள பேரினவாதிகளின் குடியேற்றம் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் உண்மைகள் வெளிப்பட வேண்டும் என்பதற்காக தற்போது பலரும் பண்ணையாளர் விவகாரம் தொடர்பாக கள விஜயங்களை மேற்கொண்டு உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்துகின்ற நிலையில் இவ்வாறான இலங்கை பொலிஸாரின் கட்டுப்பாடுகள் அதிகரித்து இருப்பதாகவும் குறிப்பிடப்கின்றது.