பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தற்போது அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்க வேண்டுமானால், அப்பொருட்களை பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அரசிற்கு வலியுறுத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில்,
பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கென பொருட்களை விநியோகிக்கக் கூடிய கட்டமைப்புகள் அரசிடம் வலுவுள்ளதாக இல்லாத நிலையில், அச்சங்கங்கள் தனியாரிடமிருந்தே பொருட்களை கொள்வனவு செய்து அவற்றை மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. இதனூடாக மேற்படி சங்கங்கங்கள் தம்மை பராமரித்துக் கொள்ளும் நிலையே தொடர்கின்றன.
இவ்வாறானதொரு நிலையில், அரசின் கட்டுப்பாட்டு விலைக்கே பொருட்கள் விற்கப்பட வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்படுகின்ற போது, அச்சங்கங்களால் அவ்வாறு விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்படுவதால், அச்சங்கங்களின் வர்த்தக செயற்பாடுகள் தடைபடுகின்றன.
இதனால் அச்சங்கங்கள் பாரிய பொருளாதார ரீதியிலான பின்னடைவுகளுக்கு உட்படுகின்றன. வர்த்தகப் போட்டிச் சந்தைகள் காரணமாக ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மேற்படிச் சங்கங்களுக்கு இத்தகைய நிலையானது மேலும், மேலும் பாதிப்பினையே தரும்.
எனவே, கட்டுப்பாட்டு விலைகளில் விற்கத்தக்க வகையில் அப்பொருட்களை கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகம் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
அத்துடன், ஏற்கனவே தனியார்த் துறையிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள பொருட்களை விற்று முடிப்பதற்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அரசிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.