சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் என கூறப்படும் தேர்தலுக்கு முன்னதாக மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தில் அரசாங்கம் உள்ளது.
இந்நிலையில் அதற்காக போராடிவரும் அரசாங்கம் அதனை சமநிலைப்படுத்தும் வாக்லியில் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க, அரச செலவினங்களைக் குறைக்கும் அதே வேளையில், அரசாங்கம் அதன் வருவாய் இலக்குகளை ஆண்டு இறுதியில் அடைய வேண்டும். மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதோடு பொருளாதாரத்தின் நீண்ட கால ஸ்திரத்தன்மையைமீட்டெடுப்பதை உறுதிசெய்வதும் அவசியமாகியுள்ளது.
அரச ஊழியர்கள் உட்பட மக்களுக்கு சில நிவாரணங்களை வழங்கும் வகையில் வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேரம் பேசியதாகவும் கூறப்படுகின்றது.
அரச ஊழியர்களின் சம்பள உயர்வை உறுதிப்படுத்துவதாக அமைச்சரவை முன்னதாக அறிவித்தது. தற்போது, வரிகளின் அடிப்படையில் சேகரிக்கப்படும் அரச வருவாயில் பெரும்பகுதி சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக செலவிடப்படுகிறது.
மேலும் ஊதிய உயர்வு அரசாங்கத்தின் வருவாய் நெருக்கடியை அதிகப்படுத்தும் என்றாலும் அரசாங்கங்கம் அதனை தேர்ந்தெடுத்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால், மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இதனால் வரவுசெலவு திட்டத்தில் நிவாரணம் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்க்கும் அதேநேரம் அடுத்த வருடம் எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்திகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவும், சமுர்த்தி நலத்திட்டத்தை தக்கவைத்தல், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் அந்தந்த தொகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.