கேப்பாப்புலவிலுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி நேற்றிலிருந்து மீண்டும் ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளை தலைமையகத்தின் நுழைவாயில் அருகில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கேப்பாப்புலவிலுள்ள 150இற்கும் மேற்பட்ட தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி இக்கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கேப்பாப்புலவுக் கிராமமானது முற்றுமுழுதாக இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த மக்கள் அனைவரும் சூரிபுரத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
எப்படியிருப்பினும், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வீட்டுத் திட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும், தங்களை தங்களது பூர்வீக கிராமத்தில் வாழும் சூழலை ஏற்படுத்தவேண்டுமெனவும் கோரி கேப்பாப்புலவுக் கிராமத்தைச் சேர்ந்த, சூரிபுரத்தில் வசித்துக்கொண்டிருக்கும் 150இற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.