ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட தரப்பினரால், இதுவரை 3 கோடியே 68 இலட்சத்து 25 ஆயிரத்து, 88 ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரும் விசாரணை மேற்கொண்டு, சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
சட்டமா அதிபர் இவை தொடர்பாக ஆராய்ந்து, 42 குற்றப்பத்திரிகைகளை கொழும்பு, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
79 பேர் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். சிலருக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சில அதிகாரிகள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனினும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நீதி அமைச்சுக்கு கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த தொகையில் 15 மில்லியன் ரூபாயை அவர் செலுத்தியுள்ளார்.
அதேநேரம், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர 75 மில்லியன் ரூபாயும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தன 75 மில்லியன் ரூபாயும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாட்டோ 50 மில்லியன் ரூபாயும், பொலிஸ் அதிகாரி சிறிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாயும் நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.
அத்தோடு, அரசாங்கம் 1 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசாங்கமானது இந்தத் தொகையை செலுத்திவிட்டது.
ஹேமசிறி பெர்ணான்டோ 5 மில்லியன் ரூபாயும், சிறிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாயையும், பூஜித் ஜயசுந்தர 10 இலட்சத்து 72 ஆயிரத்து 588 ரூபாயையும், நிலந்த ஜயவர்த்தன 4.1 மில்லியன் ரூபாயையும் இதுவரை செலுத்தியுள்ளனர்.
311 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 3 கோடியே 68 இலட்சத்து 25 ஆயிரத்து, 88 ரூபாய் நிதி இவர்களினால், நஷ்ட ஈட்டு அலுவலகத்திற்கு கிடைத்துள்ளது.
முழுமையான நிதி கிடைத்த பின்னர்தான், இதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான திட்டமிடல் ஒன்றும் நஷ்ட ஈட்டு அலுவலகத்தினால் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.