அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் தீவகத்தில் கால்நடைகள் திருடப்பட்டு வருவதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் மாடு, ஆடுகள் கடத்தும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஐவர் தப்பிச் சென்றுள்ளனர்.
அத்துடன் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வானையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
புத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட குறித்த வான் அனைத்து இருக்கைகளும் அகற்றப்பட்ட நிலையில் தார் சீற் மட்டுமே விரிப்பிடப்பட்ட நிலையில் ஆட்டு எச்சங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட வாகனம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்த வாகன உரிமையாளரை இனங்கண்டு அவரையும் கைது செய்துள்ளனர்.
வாடகைக்காக வாகனம் கொடுத்த குறித்த நபரும் தற்போது ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை தப்பியோடிய ஐவரை தற்போது காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட வானில் கைது கைதுசெய்யப்பட்டவர்களின் ஆவணங்களை பரிசீலித்தபோது வானின் உண்மை நிறம் நீல நிறமாகவுள்ளபோதிலும் தற்போது அதற்கு மோசடித் தனமாக வெள்ளை கலர் அடிக்கப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியிடம் ஒரே நேரத்தில் ஒரே புகைப்படத்துடன் இரு பெயர்களைக் கொண்ட சாரதி அனுமதிப் பத்திரங்களும் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாகவே குறித்த சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அத்துடன் குறித்த வான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்களும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.