உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் வெற்றிடங்களாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஜனாதிபதி பதவிக்கும்; அரசியலமைப்பு சபைக்கும் இடையில் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.
அதாவது நீதியரசர் புவனேக அலுவிஹாரே ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்பதற்காகவே இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நீதியரசர் நிஸ்ஸங்க கருணாரத்னவை உயர்நீதிமன்ற நீதியரசராக உயர்த்தியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் சோபித ராஜகருணாவை நியமிக்குமாறு அவர் பரிந்துரைத்துள்ளார்.
எனினும் கடந்த வெள்ளிக்கிழமை வரை, சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்பு பேரவை, ஜனாதிபதியின்; பரிந்துரை குறித்து முடிவு செய்யவில்லை எனினும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நவம்பர் 14ஆம் திகதி பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்குப் பரிந்துரைக்கப்பட்ட நீதியரசர்கள் தொடர்பில் தனது கருத்துக்களைக் கோரி எழுதிய கடிதம், ஜனாதிபதி பதவிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்ட தீர்ப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நீதியரசரின் செயல்திறன், உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட தீர்ப்புகளின் எண்ணிக்கை மற்றும் அது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் அவதானிப்புகள். சம்பந்தப்பட்ட நீதியரசர்களின் நடத்தை மற்றும் சட்ட நீதித்துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு போன்றவை தொடர்பிலேயே சபாநாயகர், பிரதம நீதியரசரின் கருத்துக்களை கோரியுள்ளார் எனினும் இந்த கோரிக்கை கடிதத்தில் நீதியரசர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாததால் தெளிவின்மை உள்ளது.
ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு இது தெளிவாகத் தெரிந்தாலும், அவர் செய்த சமீபத்திய பரிந்துரைகளே அடுத்தே இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்கு , கடிதம் அனுப்பப்படுவதற்கு முன்னர் இந்த விடயம், அரசியலமைப்பு பேரவையில் விவாதிக்கப்பட்டதாக, அடையாளம் காட்ட விரும்பாத அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.