போர் முடிவடைந்த நாளில் இருந்து போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கை ஒரு போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக விசேடமாக அறிமுகப்படுத்தி நாட்டினுடைய ஏனைய பிரதேசங்களுக்கு வேறுபட்டதொரு பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
அந்த மக்களுடைய பொருளாதாரத்தை முதற்கட்டமாக பாதுகாத்து அதை வளர்ப்பதற்கான ஒரு திட்டம் ஒன்றை குறைந்த 5 வருடங்களுக்கு செய்திருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை நாங்கள் கூறி வருகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
விசேட செயற்பாடு
மேலும் கூறுகையில் ,குறித்த பிரதேசம் ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுடைய பொருளாதாரத்துடன் போட்டி போட முடியாத நிலையாக உள்ளது. ஆனாலும் எந்த விதத்திலேயும் ஒரு விசேட செயற்பாடு எதுவுமே நடைபெறவில்லை.
இந்த விடயங்களை ராஜபக்ச தரப்பு காலத்தில் நாங்கள் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் -அவர்களுடைய மனோநிலை முற்றிலும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்தது.
ஆனால் ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து ஆட்சி புரிந்த நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சியில் இருந்தும் கூட முழுமையாக ரணில் தரப்பை ஆதரித்துக் கொண்டிருந்த காலத்தில் வரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்குக்கு என விசேடமாக நிதி ஒதுக்கப்படவில்லை என்ற விடயங்களை கூட்டிகாட்டினோம்.
நாங்கள் கேட்பது ஒரு விசேட ஏற்பாட்டையேயாகும். அவ்வாறு வரவு செலவுத்திட்டத்தில் ஒரு சதமும் வடக்கு கிழக்குக்கு ஒதுக்கப்பட்டிராத நிலையில் – மக்கள் மட்டத்தில் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களால் தமது தொகுதிகளுக்கு போகமுடியவில்லை என்றும், அப்படிப்பட்ட ஒரு நிலையை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள் எனவும் அரசாங்கத்திடம் கூறிய போது, நாங்கள் வரவு செலவு திட்டத்தில் இந்த விடயத்தை சேர்க்காமல், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் விசேட செயற்திட்டத்தினை செய்து வடக்கு கிழக்கை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப் போகின்றோம் என்று 2015 இல் குறிப்பிட்டார்கள்.
ஆனால் 2020 வரைக்கும் 52 நாட்கள் ஏற்பட்ட குழப்பத்தை நீக்கி பார்த்தால் எந்தவொரு ஏற்பாடும் நடைபெற்றிருக்கவில்லை.
ஒதுக்கீடு
வெறுமனே சில நூறு மில்லியன்களை தங்களது எடுபிடிகளுக்கும், தமது அரசாங்கத்தில் இருந்தவர்களுக்கும் வழங்கி தமது வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்காக கொடுக்கப்பட்டது.
அந்த நிதிகள் தாங்கள் ஏதோ செய்வதுபோல காட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதே தவிர, போரால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தை கட்டியெழுப்புவதற்கான எந்தவொரு ஏற்பாடும் செய்யப்படவில்லை.
அப்படிப்பட்ட ஒரு பின்னணியில்தான் இந்த வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இந்த வரவு செலவுத் திட்டத்தில் முதற் தடவையாக வடக்கு கிழக்கிற்கு 4 தலைப்புக்களின் கீழ் – பூநகரி சுண்ணக்கல் செயற்பாடு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு 1 பில்லியன் ஒதுக்கீடு, பாலியாறு தண்ணீர் திட்டம், 2500 மில்லியன் வீட்டுத்திட்டத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீடு ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டத்தில் 0.11 வீதமேயாகும். இந்த நிலையில்தான் இனப்பிரச்சினைக்கு காணி பொலிஸ் அதிகாரமற்ற மாகாண சபை 13 ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக உலகத்துக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைக்குப் போனவர்கள் இங்கே இருக்கிறார்கள். பேச்சுவார்த்தைக்குப் போனவர்களிடம் ஏதோ செய்யப்போவதாக கூறிய நிலையில், அவர்களும் ஏதோ தரப்போகிறார்கள் என்றே கதைகளைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வடமாகாணத்துக்கு ஒரு வீதம் மட்டும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்துக்கும் 1.17 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. வடமாகாணம் ஊவா மாகாணத்துக்கு அடுத்து அடிநிலையில் இருக்கிறது. வடக்கு மாகாணம் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகவும் உள்ளது.
இன பிரச்சினைக்கு தீர்வு
இன பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்போவதாக சொல்லும் நிலையில் கூட வடக்கு கிழக்குக்கான விசேட கட்டமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் தயாரில்லை என்றால் அரசாங்கத்தின் மனோநிலையை நாம் நன்கு புரிந்துகொள்ளலாம்.
இந்த அரசாங்கத்தினுடைய தற்போதைய வரவு செலவுத் திட்டம் ஒரு கற்பனையான வரவு செலவுத் திட்டம் எனவும், உரியபட்சம் அவர்கள் கூறியுள்ள இலக்குகளை அடையக்கூடிய வகையில் அமையவில்லை என்றும் பிட்ச் ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதே பிட்ச் ஆய்வு மையம் தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படப்போவதாக முன்னரேயே எதிர்வுகூறியிருந்தது.
குறித்த வரவு செலவுத்திட்டம் கற்பனையானது மற்றும் சாத்தியமற்றது என ஆய்வுகள் சொல்லப்படுகின்ற நிலையில், ஒப்புக்காக சொல்லப்பட்டுள்ள இந்த ஓதுக்கீடுகள் கூட கிடைக்கும் என்பது ஐமிச்சமானதாகும்.
இப்படிப்பட்ட பின்னணியில் , இந்த விடயங்கள்; தமிழ் மக்களுக்கு ஏமாற்றமாக இருக்கும் இடத்தில், வரவு செலவுத்திட்டம் கற்பனையாக பார்க்கப்படும் நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் ஏற்கப்படும் நிலையில் இல்லை. இதனால் எமது அமைப்பு இந்த வரவு செலவு திட்டத்தை எதிர்க்கிறது என கூறியுள்ளார்.