முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படங்கள், பெயர்களை அகற்றக் கோரி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை 150-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படங்களையும், பெயர்களையும் அகற்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படங்களையும், வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்ட அவரது பெயரையும் நீக்கக் கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் இன்று குவிந்தனர்.
அவர்கள் ஜெயலலிதாவின் பெயர்ப் பலகையை அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவரது பெயரையும், உருவப்படத்தையும் கருப்பு மையால் அழிக்க முயற்சித்தனர்.
இந்தச் சம்பவத்தால் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர், ஏராளமானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.