யாழ். வல்வெட்டித்துறையில், நீதிமன்றம் பிணை வழங்கியும் யாரும் பிணை எடுப்பதற்கு முன்வராத நிலையில் சிறையில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
30 கிலோகிராம் கஞ்சாவை கடத்தியக் குற்றச்சாட்டில், கடந்த 18 மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு 30 கிலோகிராம் கஞ்சாவினை கடத்திய குற்றச்சாட்டில் முதியவர் ஒருவர் சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
விசாரணைகளின் பின் கடந்த வருட இறுதியில் சந்தேக நபரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்திருந்தது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய முதியவரை பிணையில் எடுக்க யாரும் முன்வராத காரணத்தினால், தொடர்ந்தும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் நெஞ்சுவலி காரணமாக பாதிக்கப்பட்ட நபரை சிறைச்சாலை அதிகாரிகள், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
இருப்பினும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முதியவர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் , முதியவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.