நடிகர் தனுஷுக்கும், தனக்கும் மரபணு சோதனை செய்யுமாறு திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கூறி மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் அவர் நேற்று முன்தினம் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது அவரின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டது.
தனுஷுக்கும், தனக்கும் மரபணு சோதனை செய்யுமாறு கதிரேசன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கதிரேசன் தனது மனுவில் கூறியிருப்பதாவது, நடிகர் தனுஷ் என்னுடைய மகன் என்பதற்கு போதிய ஆதாரம் உள்ளது. அவரை 11-ஆம் வகுப்பு வரை நான் படிக்க வைத்தேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது தற்போதைய சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு, உண்மையான பெற்றோராகிய எங்களை அவரது பெற்றோர் இல்லை என்று மறுத்து வருகிறார் .
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவர் தாக்கல் செய்த பிறப்புச் சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றுகள் போலியானது என மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில் மரபணு சோதனை நடத்தினால் மட்டுமே இருவருக்கும் இடையேயான உறவை துல்லியமாக கண்டறிய முடியும்.
எனவே, எனக்கும், நடிகர் தனுஷுக்கும் மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கதிரேசன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.