தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்யாமல், மஹிந்த ராஜபக்ஷ பாரிய தவறை இழைத்து விட்டார் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாகும்.
இந்தக்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டபோது, அவர்கள் முதன் முதலாக பிரபாகரன் முன்னிலையில் தான் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்கள்.
உண்மையில், மஹிந்த ராஜபக்ஷ பெரிய தவறொன்றை இழைத்துவிட்டார். ஹிட்லர் இறந்தவுடன், அவரது நாஜி கட்சி இல்லாது போனது.
பொல் போட் இறந்தபின்னர் அவரது காம்பூச்சியா கட்சி இல்லாமல் செய்யப்பட்டது.
சதாம் உசைன் இறந்தபோதும், முபாரக் இறந்தபோதும் அவர்களது அரசியல் கட்சிகள் இல்லாது செய்யப்பட்டன.
ஆனால், எல்.ரி.ரி.ஈ. எனும் உலகிலேயே மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது அரசியல் கட்சியான ரி.என்.ஏ.வை நாம் தடை செய்யவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு காண்பித்த இரக்கம் தான், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணமாக மாறியுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.