திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தலவத்துகொட தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு மாதம் மூன்று வாரங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிரிஹான பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் இருந்த குழந்தைக்கு உடலில் திடீரென நிறம் மாறி ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தலவத்துகொடையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதன்போது குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
பின்னர், தலங்கம மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு, குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிபுணர் சட்ட வைத்திய அதிகாரி பி.எம்.டபிள்யூ. குமார பிரேத பரிசோதனை செய்து உடல் உறுப்புகளை அரசு மருத்துவனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் பிரேத பரிசோதனை வைத்திய அறிக்கையின் பிரகாரம், குழந்தையின் மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்காமல் திறந்த தீர்ப்பை வழங்குவதற்கு சமாதான நீதவான் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.