இலங்கை குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான அறிக்கை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் நேற்று (23.11.2023) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பாரிய மனித கடத்தலை மேற்கொள்ளும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் கண்டி பிரதேசத்தில் இருந்து செயற்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முறைப்பாட்டிற்கு அமைய விசாரணை
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நோர்வே பிரஜை ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் குழந்தைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.