“வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் பொலிஸாரின் அராஜகம் தொடர்ந்து வருகின்றது. அவர்களால் சந்தேகநபர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றார்கள். இதற்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்களின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய பொலிஸார் தொடர்ந்தும் அராஜகம் புரிந்து வருகின்றனர். அவர்களால் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சந்தேகநபர்களைக் கொடூர சித்திரவதைகள் மூலம் அவர்கள் கொலை செய்து வருகின்றனர்.
அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞர் பொலிஸாரின் மோசமான சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதற்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.