முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இராணுவ தளபாடங்களை இரண்டு நாட்களாக தேடிய பொலிஸாருக்கு எதுவும் கிடைக்காத நிலையில் குறித்த பகுதியினை மூடிவிடுமாறு நீதிபதி அறிவித்துள்ளார்.
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் (23.11.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸ் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தை தோண்டுவதற்கு நீதிமன்றத்தில் கடந்த (19-11-2023) அன்று வழக்கு தொடரப்பட்டது.
இரண்டு நாட்கள் தேடுதல் பணி
இதனையடுத்து நீதிபதியின் அனுமதியுடன் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கிராம சேவையாளர் பிரதேச செயலக உத்தியோகத்தர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் தடையவியல் பொலிஸார் திணைக்களம் இராணுவத்தினர் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதியில் சுமார் பத்து அடி ஆழம்வரை தோண்டப்பட்ட போதும் எந்த வித தடயங்களும் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இரண்டாம் நாளிலும் பாரிய கனரக இயந்திரம் கொண்டுவரப்பட்டு குழி தோண்டப்பட்டபோதும் எந்தவிதமாக முன்னேற்றங்களும் இல்லை என குறிப்பிடப்படுகிறது.
கடந்த மாதமும் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தங்கங்களை தேடி பாரியளவில் தோண்டப்பட்டபோதும் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.